அ.ம.மு.க.-தி.மு.க.வினர் போட்டிபோட்டு உருவபொம்மை எரிப்பு போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே அ.ம.மு.க.-தி.மு.க.வினர் போட்டிபோட்டு உருவபொம்மையை எரித்தனர். இதை தடுத்த போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-01-10 05:55 GMT
அரசூர்,

விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர், சசிகலாவை தரக்குறைவாக பேசியதாக கூறி திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் கூட்ரோட்டில் அ.ம.மு.க.வினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு அ.ம.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெ.குமார் தலைமை தாங்கினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஒன்றிய பேரவை செயலாளர் பழனிவேல், மாவட்ட விவசாய அணி செயலாளர் பாசுரமேஷ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் பரத், திருநாவலூர் ஒன்றிய பேரவை செயலாளர் திருகாமு, மாவட்ட பிரதிநிதி சின்னத்தம்பி, ஊராட்சி செயலாளர்கள் மணவாளன், அருள், நிர்வாகிகள் கணேஷ் அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போலீசாருடன் தள்ளுமுள்ளு

உதயநிதி ஸ்டாலின் உருவபொம்மை எரிக்கப்பட்டதை கண்டித்து திருவெண்ெணய்நல்லூர் கிழக்கு தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் தி.மு.க.வினர் சரவணம்பாக்கம் கூட்ரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் சசிகலா, தினகரனின் உருவபொம்மையை எரித்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவ பொம்மையை கைப்பற்றி தீயை அணைக்க முயன்றனர்.

இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தை கலைத்த போலீசார், அந்த உருவபொம்மையை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் போலீசில் அ.ம.மு.க. நகர செயலாளர் சோலையப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்