வீட்டை கிரயம் செய்து கொடுப்பதாக கூறி காவலாளியிடம் ரூ.19 லட்சம் மோசடி பெண் கைது

கடலூரில் வீட்டை கிரயம் செய்து கொடுப்பதாக கூறி காவலாளியிடம் ரூ.19 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-10 06:28 GMT
கடலூர்,

கடலூர் கோண்டூரை சேர்ந்தவர் விவேக் (வயது 53) . இவர் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் விவேக், சம்பவத்தன்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடலூர் கோண்டூர் வி.ஐ.பி. நகரை சேர்ந்த முனிராபேகம் (42) என்பவர் தனது வீட்டை விற்க போவதாக, புரோக்கர்களான வில்வநகரை சேர்ந்த ஜானகிராமன், எஸ்.என்.சாவடியை சேர்ந்த துரைசாமி ஆகியோர் மூலம் என்னை தொடர்பு கொண்டார்.

ரூ.19 லட்சம்

அப்போது ரூ.48 லட்சம் கொடுத்தால் வீட்டை கிரயம் செய்து கொடுப்பதாக கூறினர். இதனை நம்பிய நான் பல தவணைகளாக ரூ.19 லட்சத்து 15 ஆயிரத்தை கொடுத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட முனிராபேகம், தனது வீட்டை எனக்கு கிரயம் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்த நிலையில் முனிராபேகம், ஜானகிராமன், துரைசாமி ஆகியோருடன் சேர்ந்து அவரது வீட்டை வேறு ஒருவருக்கு கிரயம் செய்து கொடுத்துவிட்டார். இதுபற்றி கேட்டதற்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பெண் கைது

அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முனிராபேகம் தனது வீட்டை கிரயம் செய்து கொடுப்பதாக கூறி ஜானகிராமன், துரைசாமி ஆகியோருடன் சேர்ந்து விவேக்கிடம் ரூ.19 லட்சத்து 15 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சாவூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் பதுங்கி இருந்த முனிராபேகத்தை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஜானகிராமன், துரைசாமி ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்