நாமக்கல்லில் மண்டல அளவிலான ஓவிய கண்காட்சி - 125 ஓவியங்கள் இடம் பெற்றன

நாமக்கல்லில் நேற்று மண்டல அளவிலான ஓவிய மற்றும் சிற்ப கண்காட்சி நடைபெற்றது. இதில் 125 ஓவியங்கள் இடம் பெற்று இருந்தன.

Update: 2021-01-10 11:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் சுப்புலட்சுமி மகாலில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்திற்கான ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 கலைஞர்களின் கை வண்ணத்தில் உருவான 125 ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த கண்காட்சியினை தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் ஆணையர் கலை அரசி, மாவட்ட கலெக்டர் மெகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்களில் சிறந்த படைப்புகளை அளித்துள்ள 10 கலைஞர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3,500-ம், இரண்டாம் பரிசாக 10 கலைஞர்களுக்கு தலா ரூ.2,500-ம், மூன்றாம் பரிசாக 10 கலைஞர்களுக்கு தலா ரூ.1,500-ம், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.

இதில் கலை பண்பாட்டு துறையின் ஆணையர் கலையரசி பேசும்போது கூறியதாவது:-

இசை, நாட்டியம், நாடகம், கிராமிய கலை, ஓவியம் மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றை வளர்த்திடவும், கலைகளையும், பண்பாட்டினையும் பாதுகாத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக கலை பண்பாட்டுத்துறை செயல்பட்டு வருகின்றது.

தமிழக அரசின் முத்திரை ஓவியத்தினையும், மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையினையும் வடிவமைத்த சென்னை அரசு கவின்கலை கல்லூரியும், கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லுரியும், சென்னை அண்ணாநகர் முகப்பு வளைவு, சென்னை பல்கலைக்கழக நுழைவுவாயில் ஆகியவற்றினை வடிவமைத்த மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியும் மிகச்சிறந்த ஓவியர்களையும், தலைசிறந்த சிற்பிகளையும் உருவாக்கியுள்ளன. இந்த 3 கல்லூரிகளும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படுகின்றன.

சிறந்த ஓவியம் மற்றும் சிற்ப கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருது வழங்குதல், மாநில அளவிலான ஓவிய, சிற்ப கலைக்காட்சி நடத்துதல், தனிநபர் மற்றும் கூட்டுக்கண்காட்சி நடத்திட நிதிஉதவி வழங்குதல் போன்ற பணிகள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையின் 7 மண்டலங்கள் மற்றும் 3 ஓவிய, சிற்ப கல்லூரிகள் உள்ளிட்ட 10 இடங்களில் ஆண்டுதோறும் ஓவிய, சிற்பக்கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மத நல்லிணக்க விழா கலைநிகழ்ச்சிகள் இணைய வழியில் ஒளிபரப்பப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையொட்டி கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறையின் சேலம் மண்டல உதவி இயக்குனர் ஹேமநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார் உள்பட அரசு அலுவலர்கள், ஓவியர்கள், சிற்ப கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்