நாகர்கோவிலில் பயங்கரம் பெற்றோரை கத்தியால் குத்தி விட்டு வாலிபர் தற்கொலை

நாகர்கோவிலில் பெற்றோர் உள்பட 3 பேரை கத்தியால் குத்திவிட்டு பட்டதாரி வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-01-11 04:01 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் நேசமணி நகர் பார்க் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் ஜெயதாஸ் (வயது 71), ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி சாலினி. இவர்களுக்கு ஜெகன்(29), ஜேக்கப்(23) என 2 மகன்கள் இருந்தனர். ஜெகன் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஜேக்கப் எம்.சி.ஏ. பட்டதாரி ஆவார்.

இந்த நிலையில் நேற்று மதியம் ஜெயதாஸ் வீட்டில் இருந்து அலறும் சத்தம் கேட்டது. உடனே, அக்கம் பக்கத்தினர் ஜெயதாஸ் வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது, வாலிபர் ஜேக்கப் மிகவும் ஆவேசமான நிலையில் மாடியில் நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் மேலிருந்து கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பெற்றோருக்கு கத்தி குத்து

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஜெயதாஸ், அவரது மனைவி சாலினி மற்றும் ஜெகன் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர்.

உடனே, போலீசார் அவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

திடுக்கிடும் தகவல்

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

ேஜக்கப் கடந்த சில நாட்களாக திடீரென கோபப்படுவது, தன்னை யாரோ கொல்ல வருவதாக சத்தம் போடுவது என முரண்பட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ஜேக்கப், பெற்றோரிடம் திடீரென தகராறில் ஈடுபட்டார். இதனை அவரது அண்ணன் ஜெகன் தட்டிக்கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜேக்கப், அண்ணன் என்றும் பாராமல் ஜெகனை கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த தந்தை ஜெயதாஸ், தாயார் சாலினி ஆகியோரையும் கத்தியால் சரமாரியாக குத்தினார். அவர்களது முகம் மற்றும் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினர். உடனே, ஜேக்கப் வீட்டின் மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது.

பரபரப்பு

இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெற்றோர், அண்ணனை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வாலிபர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்