மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா: மற்றவர்களுக்கு செய்யும் தானம், தர்மம் புண்ணியமாக திரும்ப கிடைக்கும்: சக்தி அம்மா பேச்சு

மற்றவர்களுக்கு செய்யும் தானம், தர்மம் நமக்கு புண்ணியமாக திரும்ப கிடைக்கும் என்று மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் சக்தி அம்மா கூறினார்.

Update: 2021-01-11 04:35 GMT
விழாவில் சக்தி அம்மா, டி.ஐ.ஜி. காமினி ஆகியோர் கல்வி உதவித்தொகையை மாணவிக்கு வழங்கிய போது
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் சக்தி அம்மாவின் 'வித்யா நேத்ரம்' திட்டத்தின் கீழ் 4-வது கட்டமாக கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவுக்கு வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி முன்னிலை வகித்தார். 

சக்தி அம்மா தலைமை தாங்கி அருளாசி வழங்கி பேசியதாவது:-
வாழ்க்கையில் நமக்காக செய்யும் எந்த ஒரு காரியமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதனை நாம் மிகவும் சந்தோஷமாகவும் செய்வோம். ஆனால் அடுத்தவருக்கு உதவி, தானம் என்று வரும்போது பெரிதாக செய்ய மாட்டோம். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது குடும்ப பட்ஜெட், சிக்கனம் பற்றி நினைத்துப் பார்ப்போம். ஆனால் மற்றவர்களுக்கு செய்யும் தானம், தர்மம்தான் நமக்கு புண்ணியமாக திரும்ப கிடைக்கும். உதவி பெறுபவர்கள் சந்தோஷம் அடைவார்கள். உதவி செய்பவர்களுக்கு அது பலமடங்கு புண்ணியமாக வந்து சேரும்.

தானம், தர்மம்
நாம் கொடுக்கும் உணவு மற்றும் உதவிக்கு மதிப்பு உண்டு. ஆனால் அதன் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதம், புண்ணியத்துக்கு மதிப்பு கிடையாது. வாழ்க்கையில் நாம் செய்யும் தானம், தர்மம் தான் கடைசி வரை கூடவே வரும். உலகத்தில் உள்ள அத்தனை பொருட்களும் கடைகளில் கிடைக்கும். ஆனால் கடைகளில் புண்ணிம் பெற முடியாது. புண்ணியம் வேண்டுமென்றால் ஒரே வழி ஏழைகளுக்கு உதவ வேண்டும். அதனை கடவுள் கொடுத்த சந்தர்ப்பமாக நினைத்து செய்யும்போது பரிபூரண புண்ணியம் கிடைக்கும்.

ஆசை, முயற்சியை தாண்டி யோகம் இருந்தால் மட்டுமே நீங்கள் நினைத்த இடத்தை அடைய முடியும். யோகம் என்பது புண்ணியமாக உள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெற தெய்வத்தின் அருள் இருக்க வேண்டும். ஒருவருக்கு அன்போடு உதவி மற்றும் தானம் செய்யும்போது அதனால் கிடைக்கும் பலனை யாராலும் தடுக்க முடியாது. மாணவ பருவம் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். மாணவர்கள் வருங்காலத்தில் ஏழை, எளிய மக்கள் மற்றும் கல்வி பயில முடியாத மாணவர்களுக்கு உதவ வேண்டும் அப்படி செய்யும் உதவியால் அடுத்தடுத்து உங்களை போன்றவர்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு சக்தி அம்மா பேசினார்.

சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்
விழாவில் டி.ஐ.ஜி. காமினி பேசுகையில், மாணவர்கள் வாழ்வில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவாக தான் மாறுவீர்கள். எனவே நேர்மையான எண்ணத்துடன் கடுமையாக உழைக்க வேண்டும். மாணவர்கள் கல்வி உதவித்தொகையின் மூலம் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும். பின்னர் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும். அரசு அல்லது தனியார் துறைகளில் பணிபுரிந்தாலும் உண்மையாக நேர்மையுடன் உழைத்தால் முன்னேறலாம். நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் ஆரோக்கியமான போட்டி இருக்காலாம். ஆனால் பொறாமை படக்கூடாது என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து 100 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை சக்தி அம்மா, டி.ஐ.ஜி. காமினி ஆகியோர் வழங்கினர். இதில், ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, அறங்காவலர் சவுந்தர்ராஜன், நாராயணிபீடம் மேலாளர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்