மதுரையில் எய்ம்ஸ் பணிகள் விரைவில் தொடங்கப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரையில் கூறினார்.

Update: 2021-01-11 05:25 GMT
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா தடுப்பூசி

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது:-

மருத்துவ ஆய்வுப்பணிக்காக 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்த மத்திய சுகாதாரத்துறை மந்திர ஹர்ஷ் வர்தன், தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கையை பார்வையிட்டார். அதன் மூலம் தமிழகத்தில் ஒரு வலுவான சுகாதார கட்டமைப்பு நிகழ்வதாக தமிழக அரசை பாராட்டினார்.

வருகிற 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கேற்ப தமிழக அரசானது கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்கான பூர்வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக 6 லட்சம் முன்கள பணியாளர்களை அடையாளப்படுத்தி இருக்கிறோம். அவர்களுக்கு திட்டமிட்டபடி சரியான கால இடைவெளியில் தடுப்பூசி செலுத்தப்படும்.

எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த பணிகளை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி, விரைவில் மதுரையில் எய்ம்ஸ்க்கான பணிகள் தொடங்கி முடிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை உறுதி அளித்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து யாரும் பயப்பட வேண்டாம். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, கடந்த 2 மாதங்களில் இங்கிலாந்தில் இருந்து வருகை புரிந்த அனைத்து பயணிகளையும் முழுவதுமாக அடையாளப்படுத்தி அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஏற்கனவே தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களும் நலமுடன் இருக்கிறார்கள். எனவே இந்த வைரசை கண்டு பொதுமக்கள் பயப்பட வேண்டாம். அதேபோல், பறவை காய்ச்சலை பொறுத்தவரை ராஜஸ்தான் மற்றும் கேரளா மாநிலங்களில் தான் பாதிப்பு உள்ளது. பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவிட கூடாது என்பதற்காக, சுகாதாரத்துறையானது கால்நடைத்துறையுடன் இணைந்து செயலாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்