நீர்மேலாண்மையில் கோவை முன்னோடியாக விளங்குகிறது: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்

நீர்மேலாண்மையில் முன்னோடியாக கோவை விளங்குகிறது என்று கோவையில் நேற்று நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2021-01-11 05:57 GMT
கலந்துரையாடல் கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசிய போது
கமல்ஹாசன் பேட்டி
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் 5-வது கட்ட பிரசார பயணமாக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது விமானநிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் பிரசாரத்தின் 5-ம் கட்டமாக கோவை வந்துள்ளேன். செல்லும் இடமெல்லாம் மக்கள் நீதி மையத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். கோவையில் எங்களது கட்சியின் விளம்பர பேனர்கள் மற்றும் கொடிகளை போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி உள்ளனர். அவர்களுக்கு நன்றி. எங்களது கட்சி கொடிகளை அகற்றுவதற்கு காட்டும் ஆர்வத்தை மக்கள் பணியில் காட்டுங்கள். அவ்வாறு நீங்கள் காட்டியிருந்தால் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துரையாடல்
இதனைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் கோவை-அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தொழில்துறையினர், மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினார். 

அப்போது அவர் பேசியதாவது:-
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கட்சிக்கு ஆள் தேட வருகிறீர்கள் என்று நீங்கள் கூறினால், ஏன் தேடக்கூடாது என்பது தான் என் கேள்வி. மாற்றத்திற்கான மனநிலையை இந்த இடத்தில்தான் விதையாக தூவ முடியும். ஏனென்றால் நீங்கள் ஒவ்வொருத்தரும் ஒரு ஆயிரம் பேரை கட்சியை நோக்கி திசை திருப்பக்கூடியவர்கள். இங்கு பேசுவது ஒரு லட்சம் பேர் இருக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு சமம் என்று கருதுகிறேன். இந்த முழு ஊரடங்கில் சிறு, குறு தொழிலாளர்கள் எல்லாம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை கைதூக்கி விடுவதற்கு அரசு பங்கெடுக்க வேண்டும்.

நீர்மேலாண்மையில் முன்னோடியாக கோவை விளங்குகிறது. இதை எல்லா நகரங்களும் செய்ய தொடங்கினால் தமிழகத்தில் இந்த தண்ணீர் பற்றாக்குறை என்பது இல்லாமலே போய்விடும். 15 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் விற்கப்படக்கூடிய ஒன்று என்று கூறினால் அப்போது யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். இன்று அது நடந்து கொண்டு இருக்கிறது. நம் ஆதார வசதிகளை எல்லாம் அவர்கள் வியாபாரம் ஆக்கி விட்டார்கள்.

இளைஞர்கள் நேர்மையை நோக்கி வருவார்கள்
இத்தனை காலம் இந்த மாற்றங்கள் நிகழாமல் போனதற்கு காரணம் ஆட்சியாளர்கள் மட்டுமில்ல நாமும்தான். இந்த பங்களிப்பை 20 ஆண்டுகளுக்கு முன் செய்திருந்தால், இன்று வேறு அரங்கில், வேறு நகரத்தில் இருந்து நாம் உலாவி கொண்டு இருப்போம். இளைஞர்கள் எப்போதும் எந்த காலத்திலும் நேர்மையை நோக்கி வருவார்கள், மதிப்பார்கள்.கோவை, நெல்லை, மதுரை, திருச்சியை சர்வதேசதரத்தில் சிறந்த ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டங்களும், அதற்கு முன் அனுபவம் உள்ள கட்சி உறுப்பினர்களும் உள்ளனர். அதற்கான பயணம் தொடங்கி விட்டது. அதில் நீங்களும் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே வந்தேன். ஓட்டு நமது உரிமை, அதைவிட கடமை என்று தெரிந்தவர்களிடம் எல்லாம் நீங்கள் கூறுங்கள். என்னுடைய பலம், என்னுடைய யுக்தி எல்லாம் நேர்மை தான். இது நேர்மைக்கும், ஊழலுக்குமான போட்டி. இதில் நீங்கள் பங்கெடுத்தே ஆக வேண்டும். தமிழக்தை சீரமைப்போம் வாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து தொழில்துறையினர், மாணவ-மாணவிகள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்து பேசினார். இதில் பல்வேறு தொழில்நிறுவனங்களை சேர்ந்த அதிபர்கள், நிர்வாகிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்