பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-01-11 06:28 GMT
சேலம்,

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2017-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் தனியார் மதிப்பீட்டு நிறுவனத்தினர் அந்த விடைத்தாளில் செய்த முறைகேடுகள் காரணமாக அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேருக்கு தேர்வு எழுத வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முற்றுகையிட முயற்சி

இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேற்று சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகருக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு பணி வழங்கக்கோரி அந்த பகுதியில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து முதல்-அமைச்சர் தற்போது சேலத்தில் இல்லை என்று போலீசார் தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் கூறியதாவது:-

தனியார் மதிப்பீட்டு நிறுவனம் செய்த முறைகேட்டின் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? எனக் கண்டறியப்பட்டு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் கஷ்டப்பட்டு படித்து எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடாதவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. மற்றும் கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடுகளுக்கு உட்படாத நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை கருத்தில் கொண்டு நியாயமான முறையில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்