மதுரவாயலில் பரிதாபம்; பொங்கல் பரிசு பணத்தை செலவு செய்த கல்லூரி மாணவர் தற்கொலை

பொங்கல் பரிசு பணத்தை செலவு செய்ததால் தாயார் திட்டுவார்களோ என்று பயந்து, வீட்டின் பூஜை அறையில் உள்ள உறை கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-01-11 22:36 GMT
தமிழ்ச்செல்வன்; வீட்டின் பூஜை அறையில் உள்ள உறை கிணற்றை படத்தில் காணலாம்.
கல்லூரி மாணவர்
சென்னை மதுரவாயல், பாக்கியலட்சுமி நகர், எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் சின்னதம்பி. கூலித்தொழிலாளி. இவருடைய மகன் தமிழ்ச்செல்வன் (வயது 20). இவர், தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா காரணமாக தற்போது கல்லூரிகள் திறக்கப்படாததால் பகுதிநேரமாக அருகில் உள்ள தண்ணீர் கம்பெனியில் இரவு நேர வேலைக்கு சென்று வந்தார்.

தமிழ்ச்செல்வன் வீட்டில் இருந்த நகையை பெற்றோருக்கு தெரியாமல் அடமானம் வைத்து அந்த பணத்தை நண்பர்களுக்கு ஊதாரித்தனமாக செலவு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் ரேஷன் கடையில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2,500 வாங்கி வந்தார். அதில் அவர் ரூ.2 ஆயிரத்தை செலவு செய்துவிட்டு, மீதி பணம் ரூ.500-ஐ மட்டும் தந்தையிடம் கொடுத்தார். அவரது தந்தை கேட்டதற்கு ரூ.2 ஆயிரம் தொலைந்துவிட்டதாக கூறினார். இதனால் அவர், இதுபற்றி உனது தாயாரிடம் சொல்வதாக கூறினார்.

கிணற்றில் குதித்தார்
பொங்கல் பரிசு பணத்தை செலவு செய்து விட்டு தொலைந்து விட்டதாக பொய் சொல்லியதால் தனது தாயார் திட்டுவார்களோ? என்ற பயத்தில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழ்ச்செல்வன் வீட்டின் பூஜை அறையில் உள்ள சுமார் 30 அடி ஆழம் கொண்ட உறை கிணற்றின் மூடியை திறந்து திடீரென உள்ளே குதித்தார். இதைகண்ட அவரது பாட்டி பச்சையம்மாள், கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தமிழ்ச்செல்வனை மீட்க முயன்றனர். ஆனால் கிணறு சிறிய அளவில் இருந்ததால் உள்ளே இறங்கி அவரை மீட்க முடியவில்லை.

பிணமாக மீட்டனர்
இதுபற்றி தகவல் அறிந்துவந்த மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள், உறை கிணற்றுக்குள் இறங்கி தமிழ்ச்செல்வனை பிணமாக மீட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் போலீசார் தமிழ்ச்செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்