முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை; வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கைது

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து, சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. உடனே வைகோ உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-11 22:44 GMT
சென்னையில் இலங்கை தூதரகம் அருகே வைகோ தலைமையில் போராட்டம் நடந்தபோது
இலங்கை தூதரகம் முற்றுகை
இலங்கையில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே ம.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் கழககுமார், ஜீவன், சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத்புகாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எம்.நிஜாமுதீன், தமிழ் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கவுதமன், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக செயலாளர் டிங்கர் குமரன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கந்தக கிடங்கில் நெருப்பு பொறி
ஆர்ப்பாட்டத்தின்போது வைகோ பேசியதாவது:-
ஈழத்தமிழரின் வரலாறு சொல்லும் எச்சங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை ராணுவம் ஈடுபட்டு வருகிறார்கள். அதேவேளை கிளிநொச்சி உள்பட அந்நாட்டில் பல இடங்களில் போர் வெற்றிகளை குறிக்கும் வகையில் ஸ்தூபிகளை ராணுவத்தினர் அமைத்திருக்கிறார்கள். இதை என்னவென்று சொல்ல?

தற்போது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை இடித்து தள்ளியிருப்பதின் மூலம், கந்தக கிடங்கில் நெருப்பு பொறியை விழ செய்திருக்கிறார்கள். இவ்வளவு நடந்தபிறகும் இந்திய அரசு இலங்கையை கண்டிக்காமல் இருக்கிறது. இன்று இந்த போராட்டம் முடக்கப்படலாம். ஆனால் ஈழத்தமிழர்களுக்காக எதிர்காலத்தில் இளைஞர் படை எழுச்சியுடன் போராடும். அந்த நாள் நிச்சயம் வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கைது
அதனைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட சென்றனர். அதனைத்தொடர்ந்து வைகோ உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சூளைமேட்டில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அனைவரும் மாலை விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் கொரோனா ஊரடங்கில் தடையை மீறி போராட்டம் நடத்தியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது உள்பட 4 சட்டப்பிரிவுகளின்கீழ் வைகோ உள்பட 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்