கீரமங்கலம், கறம்பக்குடி, அன்னவாசல் பகுதிகளில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கீரமங்கலம், கறம்பக்குடி, அன்னவாசல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டின் அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-01-12 01:04 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த பல நாட்ளாக பெய்து வரும் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் செய்யும் அன்றாடப் பணிகளைக் கூட செய்ய முடியவில்லை. பொங்கல் விற்பனைக்காக உற்பத்தி செய்யப்பட்டுள்ள வாழை, மஞ்சள், காய்கறிகளைக் கூட விற்பனை செய்ய கமிஷன் கடைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று காலை முதல் விடாமல் தொடர் மழை பெய்ததால் மலர்கள் பறிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

கீரமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் பல நாட்களுக்கு முன்பே அறுவடை செய்ய வேண்டிய நெற்கதிர்கள் தொடர் மழையால் அடியோடு சாய்ந்து தண்ணீரில் மிதக்கிறது. பல வயல்களில் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டதால் விவசாயிகளுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டின் அருகே பள்ளம்

இந்த நிலையில் செரியலூர், சேந்தன்குடி, நகரம், பனங்குளம், குளமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் கடந்த 15 நாட்களுக்கு முன்பிலிருந்து விதைக்கப்பட்ட கடலை விதைகள் முளைத்து வயல்களில் தண்ணீர் தேங்கி செடிகள் அழுகி வருகிறது. அதே போல மிளகாய் செடிகளும் நடவு செய்யப்பட்டு மழையால் சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில் கீரமங்கலம் மேற்பனைக்கடு சாலையில் ஒரு வீட்டின் அருகே நேற்று முன்தினம் 5 அடி சுற்றளவில் அதே அளவு ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் மழையால் பலரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது தொடர் மழையால் சேதமடைந்துள்ள நெல், கடலை, மிளகாய் மற்றும் விளை பயிர்களுக்கு உரிய இழப்பீடு தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்னவாசல்

அன்னவாசல் பகுதிகளில் இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், குடுமியான்மலை, வயலோகம், அன்னவாசல், கீழக்குறிச்சி, சித்தன்னவாசல், மாங்குடி, வயலோகம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் நீர்நிலைகள் உயர தொடங்கியது. இதனால் குளம் குட்டைகளில் தண்ணீர் பெருகியது. இந்த தொடர் மழையால் அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி கடைவீதிகளும், சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்களும் வெறிச்சோடி காணப்பட்டது. சாலையில் உள்ள பள்ளங்களிலும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கியே நின்றது.

கறம்பக்குடி

கறம்பக்குடி பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று காலை தொடங்கி இரவு வரை இடைவிடாது மழை பெய்தது.

பொங்கல் பண்டிகைக்கு பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். அதேபோல் சீர்வரிசை கொடுக்க சென்றவர்கள் மழையில் நனைந்தவாறே உறவினர்களை அழைத்து சென்றனர். கரும்பு, மஞ்சள்கொத்து, மண்பாண்டங்களை விற்பனை செய்யவந்த வியாபாரிகள் அவதி பட்டனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்