விலையில்லா மடிக்கணினி வழங்ககோரி குளித்தலை அரசு பள்ளி முன்னாள் மாணவிகள் மறியல்

விலையில்லா மடிக்கணினி வழங்ககோரி குளித்தலை அரசு பள்ளி முன்னாள் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-01-12 01:26 GMT
குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18-ம் கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவிகள் நேற்று பள்ளி முன்பு உள்ள சாலையில் அமர்ந்து விலையில்லா மடிக்கணினி வழங்ககோரி மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சசீதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகள் கூறுகையில், குளித்தலை அரக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18-ம் கல்வி ஆண்டில் சுமார் 365 மாணவிகள் படித்து வந்தோம். எங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மடிக்கணினி வழங்கப்படவில்லை. எங்களுக்கு பின்னர் இப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும் 2017-18-ம் கல்வியாண்டில் படித்த எங்களுக்கு தற்போதுவரை மடிக்கணினி வழங்காதது தொடர்பாக பலமுறை தெரிவித்திருந்தோம். இருப்பினும் தங்களுக்கு மடிக்கணினி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர். இதையடுத்து குளித்தலை உதவி கலெக்டரிடம் தங்களது கோரிக்கை குறித்து தெரிவிக்குமாறு மாணவிகளை போலீசார் கேட்டுக்கொண்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் மாணவிகள் அனைவரும் குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமானை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினர். பின்னர் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்த மாணவிகள் தங்களுக்கு மடிக்கணினி வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும், வரும் திங்கட்கிழமை மீண்டும் தன்னை வந்து சந்திக்குமாறு உதவி கலெக்டர் கூறியதாக மாணவிகள் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியலால் திருச்சி - கரூர் சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்