தலைஞாயிறில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

தலைஞாயிறில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

Update: 2021-01-12 03:22 GMT
வாய்மேடு,

நாகப்பட்டினம் தொழிலாளர் நலத்துறை சார்பில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தலைஞாயிறில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக மக்கள் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்பதால் ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பயிர் நிவாரணம்

மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், பயத்தம்பருப்பு, சமையல் எண்ணெய், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், துணிப்பை உள்ளிட்டவைகள் உள்ளது. தொடர் கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு மத்திய அரசின் ஆணையின்படி 1 எக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 என்பதை மாற்றி தமிழக முதல்-அமைச்சர் ரூ.20 ஆயிரமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டத்தில் 79 ஆயிரத்து 236 விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. இதுவரை 61 ஆயிரத்து 976 விவசாயிகளுக்கு நிவாரண தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பும் பணி நடைபெற்று உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 66 ஆயிரத்து 144 விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.

நாகை மாவட்டத்தில் 6,851 நலவாரிய உறுப்பினர்களுக்கு தொழிலாளர் நலத்துறை மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு

வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் அவை.பாலசுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்