காணை ஒன்றியத்தில் 1,355 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

காணை ஒன்றியத்தில் 1,355 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2021-01-12 04:45 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் கல்வி மாவட்டம் காணை ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று காணையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் சக்திவேல், காணை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பெரும்பாக்கம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபால் அனைவரையும் வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர் ராமதாஸ் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் கலந்துகொண்டு கெடார், பனமலைப்பேட்டை, அத்தியூர்திருக்கை, சங்கீதமங்கலம், காணை, கோனூர், மாம்பழப்பட்டு, கருவாட்சி, அன்னியூர் ஆகிய அரசு பள்ளிகளில் படிக்கும் 1, 355 மாணவ- மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர்கள் வக்கீல் நாகராஜன், சிவக்குமார், பொருளாளர் தயாநிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் பிரபாகரன், துணை செயலாளர் பாரதிதாசன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் விக்ரமன், ஒன்றிய பேரவை செயலாளர் ஜெய்சங்கர், விவசாய அணி செயலாளர்கள் சண்முகம், குப்புசாமி, மாணவர் அணி செயலாளர் துரைக்கண்ணு, மாவட்ட பிரதிநிதி துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்