பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

பேரணாம்பட்டு அருகே பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-12 10:23 GMT
பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பம் அருகே உள்ள சாமரிஷிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 24). மேளம் அடிக்கும் தொழிலாளி. இவரது நண்பரான ஹேமந்த் பிரசாத் என்பவருடைய பிறந்த நாளை தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு சாமரிஷி குப்பத்திலுள்ள ஏரிக்கரையில் கேக் வெட்டி கொண்டாடி கொண்டிருந்தனர்.

அப்போது அந்தவழியாக மது போதையில் வந்த எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வில்சன் சுதாகர் மகன் ராபின் (27), அதே கிராமத்தைச் சேர்ந்த ரீகன்ராஜ் (30), சாமரிஷிகுப்பத்தை சேர்ந்த சின்னா என்ற சதீஷ்குமார் (23) ஆகியோர் ஏன் இங்கு கேக் வெட்டுகிறீர்கள் உங்க ஊரில் போய் கேக் வெட்டுங்கள் என கூறி தகராறில் ஈடுபட்டனர்.

அதற்கு அஜித் எங்கள் கிராமத்தில்தான் கேக் வெட்டுகிறோம் என தட்டி கேட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு ராபின் தரப்பினர் அஜித்தின் வயிற்றில் பேனா கத்தியால் குத்தினர். தடுக்க முயன்ற அஜித்தின் சித்தப்பா வேலு (43), நண்பர்களான சாமரிஷி குப்பத்தை சேர்ந்த திலீப் (21), சவுடேரி குப்பத்தை சேர்ந்த சரவணகுமார் (26) ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.

இதில் அஜித் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த வேலு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும், திலீப், சரவணகுமார் ஆகியோர் ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மேல்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராபின், ரீகன்ராஜ், சின்னா ஆகிய 3 பேரை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடமிருந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்