வேலூரில், மாயமான தொழிலாளியை கொலை செய்து பாலாற்றில் புதைப்பு - பிணத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை

வேலூரில் மாயமான தொழிலாளியை கொலை செய்து பாலாற்றில் மர்மநபர்கள் புதைத்துள்ளனர். பிணத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-01-12 11:52 GMT
வேலூர்,

வேலூர், தோட்டப்பாளையம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் வேலு (வயது 50). கம்பி கட்டும் தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி ரேஷன் கடையில் ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேலுவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்றங்கரை சுடுகாட்டில் எரியூட்டும் தகன மேடை அருகே பாதி உடல் புதைந்த நிலையில் பிணம் ஒன்று கிடப்பது வேலூர் வடக்கு போலீசாருக்கு தெரியவந்தது.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். நேரம் இருட்டிவிட்டதால் உடலை தோண்டி எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் வேலூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், புதைக்கப்பட்டிருந்த நபர் மாயமான வேலு என்பது தெரியவந்தது. மேலும் அவரது கை உடல் ஆகிய இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. உடலும் அழுகிய நிலையில் இருந்தது.

போலீஸ் விசாரணை

வீட்டில் இருந்து வெளியே வந்த வேலுவை பாலாற்றங்கரைக்கு அழைத்துச் சென்று மர்மநபர்கள் கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. அழுகிய நிலையில் இருந்ததால் வேலுவின் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், வேலுக்கு முன்விரோதம் ஏதேனும் உள்ளதா?, கடைசியாக அவர் யாருடன் வெளியே சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்