தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பஸ் டிரைவர் குடும்பத்தினருடன் தர்ணா

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பஸ் டிரைவர் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2021-01-12 12:10 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா ஆலமரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். அரசு பஸ் டிரைவரான இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு திடீரென குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கூறுகையில், எனக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் விவசாய கிணற்றை வேறு ஒருவர் பெயரில் தவறாக கணினி சிட்டாவில் பதிவு செய்துவிட்டனர். வருவாய்த்துறையை சேர்ந்த சிலரின் கவனக்குறைவால் ஆவணங்களில் நடந்த இந்த தவறை சரி செய்து தரக்கோரி கடந்த 3 ஆண்டுகளாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தேன். ஆனால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் என்னை தொடர்ந்து அலைக்கழித்து வருகிறார்கள். இதனால் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் காரணமாக தற்காலிக பணி நீக்கத்திற்கு உள்ளாகி எனது குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி எனக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தரவேண்டும். அதற்கான நடவடிக்கையை எடுக்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்