திருமங்கலம், வாடிப்பட்டி பகுதியில் கடைகள், ஓட்டல்களில் தொடர் கைவரிசை காட்டியவர் கைது - 93 கோவில் மணிகள், 6 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

திருமங்கலம் , வாடிப்பட்டி பகுதியில் உள்ள கடைகள், கோவில்களில் தொடர் கைவரிசை காட்டியவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து கோவில் மணிகள், கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-01-12 15:44 GMT
திருமங்கலம்,

கடந்த சில மாதங்களாக திருமங்கலம் பகுதியில் உள்ள கோவிலில் உள்ள மணிகளையும், பூட்டிய பெட்டிக் கடையில் உள்ள கியாஸ் சிலிண்டர்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இதையடுத்து திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோதினி உத்தரவின் பேரில், திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து பொருட்களை திருடியது யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று கப்பலூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக போலீசாரிடம் பேசவே சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருட்டு வழக்கில் தேடி வரும் நபர் என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் பேரையூர் அருகே உள்ள முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த கள்ளராமன் (வயது 62) என்பதும், திருமங்கலம், வாடிப்பட்டி மற்றும் திருமங்கலம் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், கோவில்கள், ஓட்டல்கள், பாத்திரக்கடைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவரிடம் இருந்து 93 கோவில் மணிகள், 13 செல்போன்கள், 6 கியாஸ் சிலிண்டர்கள், சமையல் பாத்திரங்கள், 2½ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும். இவர் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.

மேலும் செய்திகள்