போடி அருகே, கோழிப்பண்ணை ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் முற்றுகை போராட்டம்

போடி அருகே கோழிப்பண்ணை ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2021-01-12 16:38 GMT
போடி,

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கீழசொக்கநாதபுரம் நேருஜி காலனியை சேர்ந்தவர் ஒண்டிவீரன். இவரது மகன் ரவிக்குமார் (வயது 26). இவர் டிப்ளமோ படித்து முடித்து விட்டு பெங்களூருவில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் ஊழியராக வேலை செய்து வந்தார். பின்னர் கொேரானா பரவல் காரணமாக இவர் சொந்த ஊரில் தங்கியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ரவிக்குமார் வீட்டை விட்டு வெளியில் சென்றார். ஆனால் நள்ளிரவு ஆன பின்னரும் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் ரவிக்குமாரை அவரது தந்தை தேடிசென்றார்.

அப்போது கீழசொக்கநாதபுரத்தை அடுத்த சுந்தரராஜபுரத்திலிருந்து சில்லமரத்துபட்டி செல்லும் சாலையில் புளியமரத்தடி என்ற இடத்தில் ரவிக்குமார் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு இறந்து கிடந்தார். அவரது பின் தலை, வலதுபுற தோள்பட்டையில் அரிவாள் வெட்டு இருந்தது. அந்த இடத்தில் மிளகாய் பொடி தூவியதற்கான அடையாளங்கள் இருந்தது. மர்மநபர்கள் ரவிக்குமார் மீது மிளகாய்பொடியை தூவி அவரை நிலைகுலைய செய்து அரிவாளால் வெட்டி கொன்று உள்ளனர். அவரது இடது கை ஆள்காட்டி விரல் துண்டாக கிடந்தது.

இது குறித்து போடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போடி ேபாலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ேமலும் இறந்த ரவிக்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ரவிக்குமார் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தநிலையில் ரவிக்குமாரின் உறவினர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ரவிக்குமாரின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவமனை முன்பு மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சாலைமறியல் செய்ய முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் ரவிக்குமாரை கொலை செய்தவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறிவிட்டு அவர்கள் தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்