திருடிய காரை ஆன்லைனில் விற்று மீண்டும் கைவரிசை தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது

திருடிய காரை ஆன்லைனில் விற்று மீண்டும் கைவரிசை காட்டிய தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-01-13 02:58 GMT
பெங்களூரு, 

ராமநகர் மாவட்டம் கும்பலகோடு அருகே வசித்து வருபவர் நாராயண ரெட்டி. இவர் சமீபத்தில் தான் ஆன்லைன் மூலமாக ரூ.12½ லட்சத்துக்கு ஒரு காரை வாங்கி இருந்தார். இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி இரவு தன்னுடைய வீட்டு முன்பாக தனது காரை நாராயண ரெட்டி நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் அவர் எழுந்து பார்த்த போது கார் இல்லாததை கண்டு அதிா்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் அந்த காரை திருடி சென்றிருந்தனர். இதுகுறித்து நாராயண ரெட்டி கொடுத்த புகாரின் பேரில் கும்பலகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நாராயண ரெட்டியின் காரை திருடியதாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த நாகேஷ்வரராவ் (வயது 35), கிரண் ரெட்டி (29) மற்றும் தமிழ்நாடு கிருஷ்ணகிரியை சேர்ந்த அரவிந்த்குமார் (46) என்று தெரியவந்தது.

திருட்டு காரை விற்றனர்

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு சொகுசு காரை 3 பேரும் சேர்ந்து திருடி இருந்தார்கள். அந்த காரை ஆன்லைனில் விற்பனை செய்ய முயன்றனர். அதன்படி, நாராயண ரெட்டி, அந்த காரை ரூ.12½ லட்சம் கொடுத்து 3 பேரிடம் இருந்து வாங்கி இருந்தார். நாராயண ரெட்டியிடம் காரை கொடுக்கும் முன், அந்த சாவியை போன்ற மற்றொரு சாவியையும் போலியாக தயாரித்து வைத்திருந்தனர். கடந்த பல நாட்களாக அந்த காரை திருட 3 பேரும் திட்டமிட்டு இருந்தனர்.

பின்னர் கடந்த 9-ந் தேதி கள்ளச்சாவியை பயன்படுத்தி நாராயண ரெட்டியின் காரை திருடியது தெரியவந்துள்ளது. ஏற்கனவே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக 3 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததும், ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் வாகன திருட்டில் அவர்கள் ஈடுபட்டதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து 2 கார்கள் மீட்கப்பட்டன. அவர்கள் 3 பேர் மீதும் கும்பலகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்