பணி நிரந்தரம் கேட்டு பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் நூதன போராட்டம்

பணி நிரந்தரம் கேட்டு பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-13 03:30 GMT
புதுச்சேரி, 

புதுவை அரசின் பொதுப் பணித்துறையில் பணிபுரியும் வவுச்சர் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் அல்லது தினக்கூலி ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் புதுவை அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு என்ற அமைப்பினை தொடங்கி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று அவர்கள் அண்ணா சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மழை பெய்துகொண்டே இருந்த நிலையிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட 4 பேர் பிணம் போன்று நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வாயில் வெற்றிலையும் வைக்கப்பட்டிருந்தது. அவர்களது அருகில் சில ஊழியர்கள் அமர்ந்து சங்கு ஊதி ஒப்பாரி வைத்தபடி இருந்தனர். ஊழியர்களின் இந்த நூதன போராட்டத்தை அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.

காரைக்கால்

இதேபோல் காரைக்காலில் பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர் சங்கத்தின் செயலாளர் பிரபு தலைமையில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 14-ம் நாள் போராட்டமாக, ஊழியர் ஒருவர் இறந்தது போல் படுக்கவைத்து, வெள்ளைத்துணியை போர்த்தி, அவரை சுற்றி, சக ஊழியர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இந்த நூதன போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்