சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.21¼ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் ரூ.11 லட்சம் தங்கமும் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.21¼ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.11 லட்சம் தங்கமும் சிக்கியது.

Update: 2021-01-13 04:01 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ராமநாதபுரத்தை நவுப்பர் (வயது 28), சென்னையை சேர்ந்த சவுர் பாத்திமா (44), திருச்சியை சேர்ந்த தில்சாத் (39) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்த கைப்பைகளை சோதனை செய்தனர்.

வெளிநாட்டு பணம்-தங்கம்

அதில் கட்டுக்கட்டாக அமெரிக்கா டாலர்கள், சவூதி ரியால்கள், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் நாட்டு பணம் ஆகியவை மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, 3 பேரிடமும் இருந்து ரூ.21 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதே போல் துபாயில் இருந்து விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய சென்னையை சேர்ந்த முகமது அஸ்மத் (33) என்பவரை நிறுத்தி அவரது உள்ளாடையை சோதித்த போது, ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 220 கிராம் தங்கம் கடத்தி வந்ததை கண்டறிந்து, அதை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்