இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டு தனுஷ்கோடி கடலில் வீசப்பட்ட 170 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டு தனுஷ்கோடி கடலில் வீசப்பட்ட சுமார் 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-01-13 14:53 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் ஏராளமான பார்சல்கள் மிதந்து வருவதாக அந்த வழியாக மீன் பிடித்து வந்த மீனவர்கள் இந்திய கடலோர காவல் படைக்கும் மற்றும் கியூ பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து ராமேசுவரம் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் மகேசுவரி தலைமையில் கியூ பிரிவு போலீசார் தனுஷ்கோடி பகுதிக்கு விரைந்து சென்றனர். கம்பிபாடுக்கும், அரிச்சல்முனைக்கும் இடைப்பட்ட வடக்கு கடல் பகுதியில் மிதந்து வந்து கொண்டிருந்த 2 பண்டல்களை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது அதில் 24 பார்சல்கள் இருப்பதும் அதில் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது.

ஒவ்வொரு பார்சலும் சுமார் 2 கிலோ எடை இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவற்றை கியூ பிரிவு போலீசார் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் தனுஷ்கோடி கடல் பகுதியில் மிதந்து வந்த சுமார் 3 பண்டல்களை இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். அதில் சுமார் 150 கிலோ கஞ்சா இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படை மற்றும் கியூ பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்டு உள்ள கஞ்சா பார்சல்கள் தனுஷ்கோடி அல்லது ராமேசுவரம் பகுதியில் இருந்து கடத்தல்காரர்கள் படகுகள் மூலமாக ஏற்றி இலங்கைக்கு கடத்தி சென்றபோது இந்திய கடலோர காவல்படை அல்லது கடற்படை ரோந்து கப்பலை பார்த்து கடலில் கடத்தல்காரர்கள் வீசி இருக்கலாம் அல்லது பலத்த சூறாவளி காற்று கடல் சீற்றம் காரணமாக கொண்டு செல்ல முடியாமல் கடலில் வீசி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய- மாநில உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனுஷ்கோடி கடல் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ள சுமார் 170 கிலோ கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களுக்குமுன்பு தான் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதி மற்றும் மணல் திட்டுகளிலும் சுமார் 1200 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்