கூடலூர், முதுமலையில் பாதுகாப்பாக ரோந்து செல்வது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி

கூடலூர், முதுமலையில் பாதுகாப்பாக ரோந்து செல்வது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-01-13 16:06 GMT
கூடலூர்,

கூடலூர் வனத்துறையினருக்கு நீர் மேலாண்மை முதலுதவி சிகிச்சை மற்றும் வனப்பகுதியில் ரோந்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த பயிற்சி முகாம் கூடலூர் நாடுகாணியில் நடைபெற்றது.

முகாமுக்கு கூடலூர் கோட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் தலைமை தாங்கினார். உதவி வனப்பாதுகாவலர் விஜயன் முன்னிலை வகித்தார். கூடலூர் கோட்டத்தில் உள்ள ஓவேலி, கூடலூர், தேவாலா, பிதிர்காடு, சேரம்பாடி ஆகிய சரகங்களில் பணியாற்றும் வன பணியாளர்களுக்கு 'தீ' மேலாண்மை, முதலுதவி சிகிச்சை, வனப்பகுதியில் ரோந்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வனத்துறையின் பயிற்சி பெற்ற வன உயரடுக்கு படை உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் கலந்து கொண்டு வன பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தார். தொடர்ந்து ஆற்று படுகைகளை கயிறுகள் மூலம் எவ்வாறு கடப்பது, உயரமான மரம் மற்றும் கட்டிங்களில் பாதுகாப்பாக ஏறுவது உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. பின்னர் இந்தியாவிலேயே முதன் முறையாக பாரம்பரிய இன நாய்களான கன்னி, கோம்பை, சிப்பிப்பாரை போன்ற வளர்ப்பு நாய்கள் உதவியுடன் வனக்குற்றங்களை கண்டறிவதில் தமிழக வனத்துறை செயல்படும் விதங்கள் குறித்து ஜீன்பூல் தாவரவியல் மைய பூங்கா வளாகத்தில் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

குரங்கனி தீ விபத்து சம்பவத்துக்கு பிறகு வன உயரடுக்கு படை உருவாக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வனத்தில் களப்பணியாற்றும் பணியாளர்கள் நீர் மற்றும் தீயில் இருந்து தப்பிப்பது குறித்து தொடர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியானது களப்பணியாளர்களக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் வளாகத்தில் வனத் துறையினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வனச்சரகர் கள் உட்பட வனத்துறையினர் திரளாக கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

மேலும் செய்திகள்