பலத்த மழையால் ஹைவேவிஸ் மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறைகள் சுற்றுலா பயணிகளுக்கு தடை

பலத்த மழையால் ஹைவேவிஸ் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-01-14 02:06 GMT
தேனி, 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு, மேல்மணலாறு, கீழ்மணலாறு, மகாராஜாமெட்டு போன்ற கிராமங்கள் உள்ளன. தேயிலை தோட்டங்கள் நிரம்பிய இந்த மலைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

கடந்த சில நாட்களாக இந்த மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் ஹைவேவிஸ் மலைப்பாதையில் சில இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் மரங்களும் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்த போது மலைப்பாதையில் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் அந்த மலைப்பாதையில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு போலீஸ் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஹைவேவிஸ் போலீஸ் நிலையம் சார்பில் ஹைவேவிஸ், தென்பழனி உள்ளிட்ட இடங்களில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதில், "ஹைவேவிஸ் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மேகமலை, ஹைவேவிஸ், மேல் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மலைப்பாதையில் அதிகப்படியான மழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்பட்டதுடன், பெரிய பாறைகளும், மரங்களும் சாலையில் விழுந்து கிடக்கின்றன. இதனால், இந்த சாலை மிகவும் அபாயகரமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மறுஅறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர். நாளை மறுநாள் (சனிக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த தடை சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலும் செய்திகள்