ஆசனூர் பகுதியில் தொடர் மழை: உலர வைக்கப்பட்ட மக்காச்சோள கதிர் முளைத்ததால் பெரும் நஷ்டம்

ஆசனூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக உலர வைக்கப்பட்ட மக்காச்சோள கதிர் முளைத்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-01-14 02:07 GMT
தாளவாடி, 

தாளவாடியை அடுத்த ஆசனூர், ஒடமந்தை, ஒசட்டி, கோட்டாடை, தேவர்நத்தம், குளியாடா, மெட்டல்வாடி, பனக்கள்ளி, தொட்டகாஜனூர், திகினாரை, முதியனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த பகுதியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மானாவாரி நிலங்களில் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்வது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் ஆசனூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது.

மக்காச்சோளம் அறுவடை

கதிர் வந்தததை தொடர்ந்து கடந்த வாரம் மக்காச்சோளம் அறுவடை நடைபெற்றது. இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோள கதிரை விவசாயிகள் தனியாக பிரித்து எடுக்க அந்த பகுதியில் உள்ள களத்தில் உலர வைத்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ஆசனூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக களத்தில் மக்காச்சோள கதிர் உலர வைக்கப்பட்ட களத்தில் மழைநீர் தேங்கியது. இதில் மக்காச்சோள கதிர் நனைந்து நாசமாகியதுடன், அதில் மீண்டும் மக்காச்சோள பயிர் முளைத்துவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இழப்பீடு

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘நாங்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து மக்காச்சோளம் பயிரிட்டோம். தற்போது பல இடங்களில் மக்கச்சோள கதிர் அறுவடை செய்யப்பட்டு களத்தில் உலர வைக்கப்பட்டிருந்தது. கதிர் உலர்வதற்குள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்யததால் கதிரில் மீண்டும் பயிர் முளைத்துவிட்டது. இதனால் மக்காச்சோள கதிரை விற்பனை செய்யமுடியாமல் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. மழையால் நாசமான மக்காச்சோள கதிருக்கு உண்டான இழப்பீட்டை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும்,’ என்றனர். 

மேலும் செய்திகள்