பெரியகுளம் அருகே மலைக்கிராம மக்களுக்கு ரூ.4 கோடியில் நலத்திட்ட உதவிகள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சோத்துப்பாறையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, மலைக்கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2021-01-14 02:10 GMT
பெரியகுளம்,

பெரியகுளம் அருகே அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கன்அலை, குறவன்குழி, கரும்பாறை, சூழ்ந்தகாடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் மலைக்கிராம மக்களுக்கு ரூ.4 கோடி மதிப்பில் பசுமை வீடுகள், தேன் வளர்ப்பு பெட்டி, தார்ப்பாய், பண்ணை கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சோத்துப்பாறையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, மலைக்கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கண்ணக்கரையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய கட்டுமான பணியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அதே பகுதியில் அம்மா மினி கிளினிக்கையும் அவர் திறந்து வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரீத்தா, பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல் சமது, மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அன்பு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்