ஐ.வி.டி.பி. மகளிர் சுய உதவிக்குழுவில் பணியாற்றும் 420 பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் பொங்கல் பரிசு தொகுப்பு

ஐ.வி.டி.பி. தன்னார்வ தொண்டு நிறுவனம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து கிராமப்புற ஏழை மகளிரை முன்னேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது.

Update: 2021-01-14 04:45 GMT
கிருஷ்ணகிரி, 

ஐ.வி.டி.பி. தன்னார்வ தொண்டு நிறுவனம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து கிராமப்புற ஏழை மகளிரை முன்னேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 14 ஆயிரத்து 302 மகளிர் சுய உதவிக்குழுக்களில் இருந்து 4 ஆயிரத்து 761 குழுக்களை சேர்ந்த 85 ஆயிரத்து 635 உறுப்பினர்கள் இந்த ஆண்டு ரூ.72 கோடி லாப பங்கீடாக பெற்று பயன் அடைந்துள்ளனர். மேலும் உபரி சேமிப்பாக ரூ.70 கோடி என மொத்தம் ரூ.142 கோடியை உறுப்பினர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும் ஐ.வி.டி.பி. நிறுவனத்தில் இருந்து ரூ.8 ஆயிரத்து 280 கோடி வங்கி கடனாகவும், சங்க கடனாகவும், ஐ.வி.டி.பி. கடனாகவும், பல்வேறு சுகாதார திட்டங்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஐ.வி.டி.பி. நிறுவனத்தின் மூலம் நேரடியாகவும், 74 தொகுதி அளவு கூட்டமைப்புகளின் மூலமும் பணியாளர்கள் மேற்பார்வையிட்டு வழிநடத்தி வருகிறார்கள்.

அந்த பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஐ.வி.டி.பி. நிறுவனத்தின் மூலம் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் ஐ.வி.டி.பி. மகளிர் சுய உதவிக்குழுக்களில் பணியாற்றும் 420 பணியாளர்களுக்கு தலா ரூ.500 மதிப்பில் பொங்கல் பரிசாக அரிசி, வெல்லம், நெய், முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. அனைத்து பணியாளர்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிய ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ், பணியாளர்கள் அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்