ஊட்டியில் தொடர் மழை: படகு சவாரி நிறுத்தம்; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டியில் தொடர் மழையால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2021-01-14 06:28 GMT
ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதலே ஊட்டி நகரில் சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதோடு, சில பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் கடும் குளிர் ஏற்பட்டது. சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடியும், குளிரை போக்க கம்பளி ஆடைகள் அணிந்தபடியும் வலம் வந்தனர்.

ஏமாற்றம்

தொடர் மழை காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டன. மிதி படகுகளில் மழைநீர் தேங்கி இருந்தது. மழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கையாக படகு சவாரி நிறுத்தப்பட்டதால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-6, குன்னூர்-3, கேத்தி-6, உலிக்கல்-20, கோத்தகிரி-3 உள்பட மொத்தம் 53.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 1.84 மி.மீ. ஆகும்.

மேலும் செய்திகள்