துப்புகானப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை 15 ஏரிகளில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்

துப்புகானப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை 15 ஏரிகளில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம், முருகன் எம்.எல்.ஏ. கோரிக்கை.

Update: 2021-01-15 03:02 GMT
கிருஷ்ணகிரி, 

வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது தொகுதிக்கு உட்பட்ட நேரலகிரி கிராமத்தில் மாரியம்மன் திருவிழா நடந்தது. அப்போது விழாவை காண வந்த பொதுமக்கள் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் மேகாஸ்ரீ என்ற சிறுமியும், முனிபாலன் என்ற முதியவரும் இறந்து விட்டனர். 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும்.

சூளகிரி ஒன்றியம் துப்புகானப்பள்ளி ஊராட்சி கனசூர் கிராமத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தூள்செட்டி ஏரிக்கு கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனது தொகுதிக்கு உட்பட்ட சானமாவு, பீர்ஜேப்பள்ளி, கொம்மேப்பள்ளி, உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே இந்த கால்வாயை பொதுமக்களின் நலன் கருதி மேலே குறிப்பிட்ட ஊராட்சிகள் வழியாக கால்வாய் அமைக்க கேட்டுக் கொள்கிறேன். துப்புகானப்பள்ளி முதல் நாகமங்கலம் வரையில் 15 ஏரிகளில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், நிர்வாகி சுந்தரேசன், விவசாய அணி நிர்வாகி முருகன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்