மராட்டிய மந்திரிக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பாடகி மீது பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு

மந்திரி தனஞ்செய் முண்டே மீது பாலியல் புகார் அளித்த பாடகி, ஆண்களை தனது வலையில் விழவைத்து பணம் பறிப்பவர் என போலீசாருக்கு பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் பரபரப்பு கடிதத்தை எழுதி உள்ளார்.

Update: 2021-01-15 20:34 GMT
கிருஷ்ணா ஹெக்டே
பாலியல் புகார் கூறியவர் மீது குற்றச்சாட்டு
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான தனஞ்செய் முண்டே மாநில சமூகநீதி துறை மந்திரியாக உள்ளார். இவர் மீது பாடகி ஒருவா் சமீபத்தில் பாலியல் புகார் அளித்தார். இது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரை அடுத்து மந்திரி தனஞ்செய் முண்டே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜனதாவினர் வலியுறுத்தினர்.

இந்தநிலையில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரே, மந்திரி தனஞ்செய் முண்டே மீது பாலியல் புகார் அளித்த பெண், ஆண்களை தனது வலையில் விழவைத்து பணம் பறிப்பவர் என குற்றம்சாட்டி அம்போலி போலீசாருக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளாா்.

பணம் பறிக்கும் திட்டம்
இதுகுறித்து பா.ஜனதாவை சேர்ந்த கிருஷ்ணா ஹெக்டே எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அந்த பெண் கடந்த 2010-ம் ஆண்டு முதல் என்னை ஏமாற்ற முயற்சி செய்து வருகிறார். அவர் பல்வேறு செல்போன் எண்களில் இருந்து எனக்கு போன் செய்து, குறுந்தகவல்கள் அனுப்பினார். இதை அவர் 2015-ம் ஆண்டு வரை செய்தார். அவரை சந்திக்க விருப்பம் இல்லை என நான் தெளிவாக கூறிவிட்டேன். அந்த பெண், மந்திரி தனஞ்செய் முண்டே மீது புகார் அளித்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே தான் போலீசாரை அணுக முடிவு செய்தேன். இது ஏமாற்றி வலையில் விழவைத்து, மிரட்டி பின்னர் பணம் பறிக்கும் திட்டம். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மும்பை போலீசார் 
விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் பிரச்சினை அல்ல
இதேபோல மந்திரி மீது புகார் அளித்த பெண், வேறு ஒரு அரசியல்வாதியையும் தனது வலையில் விழவைக்க முயற்சி செய்ததாகவும் கிருஷ்ணா ஹெக்டே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " இது என்னை பொறுத்தவரை அரசியல் பிரச்சினை இல்லை. தற்போது இது தனஞ்செய் முண்டேவுக்கு நடந்து உள்ளது. இது எனக்கும் நடந்து இருக்கலாம். நாளை வேறுயாருக்கும் கூட நடக்கலாம்." என்றார்.

மேலும் செய்திகள்