தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக குறைப்பு; பயிர் சேத கணக்கெடுப்பு பணி தீவிரம்

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. பயிர் சேத கணக்கெடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2021-01-16 20:30 GMT
குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் மண்டபம்; சுத்தமல்லி பகுதியில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கும் காட்சி
கடும் வெள்ளப்பெருக்கு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பின. மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து கடந்த 12-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரானது தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதாவது ஆற்றில் வினாடிக்கு அதிகபட்சமாக சுமார் 70 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் சென்றது. இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

கோவில்கள் மூழ்கின
இதன் காரணமாக நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், நெல்லை தாமிரபரணி ஆற்றில் உள்ள ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவில், எல்லைக்காவல் சுடலைமாடசாமி கோவில், இசக்கி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும், மண்டபங்களும் ஆற்றில் மூழ்கின.

அம்பை, சேரன்மாதேவி, கருப்பந்துறை, சீவலப்பேரி ஆற்றுப்பாலங்களும், நெல்லை சந்திப்பு, கருப்பந்துறை, மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, அம்பை, விக்கிரமசிங்கபுரம், ஆலடியூர் உள்ளிட்ட ஊர்களில் ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

8 ஆயிரம் கனஅடி தண்ணீர்
இந்த நிலையில் நேற்று அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டது.

நேற்று பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 5,740 கனஅடி வீதமும், மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 1,995 கனஅடி வீதமும், கடனா நதியில் இருந்து 512 கனஅடி வீதமும், ராமநதியில் இருந்து 140 கனஅடி வீதமும் என மொத்தம் 8,387 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைய தொடங்கியது. தண்ணீரில் மூழ்கி இருந்த கோவில்கள், மண்டபங்கள் வெளியே தெரிய தொடங்கின.

சீரமைப்பு பணிகள்
சேரன்மாதேவி, கருப்பந்துறை, சீவலப்பேரி பாலங்களில் வெள்ளம் குறைந்து, மரக்கிளைகள், செடி, கொடிகள் பாலத்தில் அப்படியே கிடந்தன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து ெபாதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மரக்கிளைகளை அகற்றினர். கருப்பந்துறையில் இந்த பணியை தாசில்தார் செல்வம், வருவாய் ஆய்வாளர் செல்லதுரைச்சி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

64 வீடுகள்-பயிர்கள் சேதம்
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் பெய்த மழைக்கு இதுவரை 63 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 21 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்தன. ஆடு, மாடுகள் உள்ளிட்ட 8 கால்நடைகள் இறந்துள்ளன. தற்போது 205 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பை, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, சங்கன்திரடு, சுத்தமல்லி, கொண்டாநகரம், கோடகநல்லூர் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பயிர் வகைகள், கிழங்குகள் உள்ளிட்டவைகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இயல்பு நிலை திரும்புகிறது
நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை தற்போது குறைந்ததால் நேற்று முதல் மக்கள் தங்களது அன்றாட பணிகளில் ஈடுபட்டனர். இதனால் இயல்வு நிலை திரும்புகிறது. நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலையில் வெயில் அடித்தது. மாலை 3 மணி அளவில் சாரல் மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெய்த மழையுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2 வாரத்திலேயே பலமடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்