சாக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதல்; வீடு, கடை சூறை; 11 பேர் கைது; பொதுமக்கள் மறியல்

சாக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதி கொண்டனர். இதில் வீடு, கடை சூறையாடப்பட்டது. இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-16 23:18 GMT
சாக்கோட்டை அருகே மித்திராவயல் விலக்கு ரோட்டில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
தாக்குதல்
சாக்கோட்டை போலீஸ் சரகம் பெருந்தாக்குடி அருகே சாலையில் நேற்று முன்தினம் பகலில் ஒரு தரப்பினர் மோட்டார் சைக்கிளில் மற்றும் கார்களில் வேகமாக சென்றனர். அப்போது அங்கு நின்ற அப்பகுதியை சேர்ந்த சிலர் மெதுவாகச் செல்லக் கூடாதா? என கேட்க, காரில் சென்றவர்கள் ஓரமாக நிற்க கூடாதா? என்று கேட்க இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் காரில் வந்தவர்கள் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் மீண்டும் காரில் மேலும் சிலரை அழைத்துக்கொண்டு வேல் கம்பு, கட்டை மற்றும் ஆயுதங்களோடு சம்பவ இடத்திற்கு வந்திறங்கி அங்கே வீட்டின் முன் நின்றிருந்த கணேசன் (வயது 65) என்பவரையும், அவருடன் இருந்தவர்களையும் ஆபாசமாக பேசி தாக்கினார்கள்.

வீடு, கடை சூறை
பின்னர் அங்கிருந்த கடைகள், வாகனங்கள், வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். வீடுகளுக்குள் புகுந்து அங்கு இருந்தவர்களையும் தாக்கியுள்ளனர். காயம் அடைந்தவர்களிடம் ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சாக்கோட்டை போலீசார் விரைந்தனர்.காயம் அடைந்த கணேசன் உள்பட 6 பேர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பெருந்தாக்குடி கணேசன் சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சாக்கோட்டை போலீசார் ஆவத்தான் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அஜித் குமார் (வயது 23) செல்வம் (22) என்பவர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் அஜித்குமார் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொதுமக்கள் மறியல்
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தரப்பை சேர்ந்த சிறுகப்பட்டி, பெத்தாட்சிக்குடியிருப்பு, மித்திராவயல், பெரியகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சார்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மித்திரா வயல் விலக்கு ரோட்டில் நேற்று பகல் 3 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நாங்கள் கொடுக்கும் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் .என கோரிக்கை விடுத்தனர். தொடர் மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், தாசில்தார் ஜெயந்தி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையின் போது, மறியலில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரவு 9 மணியளவில் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்