தொடர் மழையால் வரத்து குறைந்தது பூக்களின் விலை உச்சத்தை தொட்டது

மணப்பாறையில் தொடர் மழை மற்றும் வரத்து குறைவினால் பூக்கள் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் பூக்களை வாங்க வந்த பலரும் வாங்காமல் சென்றனர்.

Update: 2021-01-17 01:52 GMT
மணப்பாறை, 

மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றியங்களில் பெறும்பாலான இடங்களில் பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த கஜா புயலின் போதும், அதன் பின்னர் கொரோனா காலகட்டம் என பூக்கள் சாகுபடி அதிக அளவில் செய்தும் அது பயனற்று விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகினர்.

இதனால் தற்போது பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்படுகின்றது. இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையின் காரணமாக செடிகளில் இருந்து மொட்டுக்கள் அனைத்தும் விழுந்து விட்டது.

எகிறிய விலை

இதுமட்டுமின்றி பல இடங்களில் பூச்செடிகள் அழுகி விட்டது. இதனால் பூக்களின் வரத்து மிகவும் குறைந்தே காணப்படுகின்றது. இதன்காரணமாக திருச்சி காந்திமார்க்கெட், ஸ்ரீரங்கம் பூ சந்தை மற்றும் மணப்பாறை பூ மார்க்கெட்டிற்கு நேற்று மல்லிகை பூ வரத்து மிகவும் குறைந்தே காணப்பட்டது.

இதுமட்டுமின்றி முல்லைப்பூ, பிச்சிப்பூ, கேந்தி, சம்பங்கி, காக்கரட்டான் என பூக்களின் விலை உச்சம் தொட்டது. மல்லிகை பூ கிலோ ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,500 வரை விற்பனையானது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1,500-க்கும், ஜாதிப்பூ ரூ.1,000-க்கும், காக்கரட்டான் பூ ரூ.1,450-க்கும் விற்பனை ஆனது.

முகூர்த்த நாள்

பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பூக்கள் வாங்க வந்த பலரும் விலை உச்சத்தால் அவற்றை வாங்காமல் ஏக்கத்தோடே சென்றனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகம் இருந்தும் விலை உயர்வால் குறைந்த அளவு பூக்களையே வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.

மேலும் செய்திகள்