மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி ஆம்புலன்ஸ் ஊழியர்களை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் ஊழியர்களை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-17 05:08 GMT
அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இளந்துறை ஊராட்சி மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் மகன் வெங்கடேசன் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் விழுப்புரத்தில் இருந்து மேட்டுக்குப்பத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மடப்பட்டு - திருகோவிலூர் சாலையில் துலுக்கப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் சித்தலிங்கமடத்தை சேர்ந்த 5 பேர் வந்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் வெங்கடேசன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிளிலும் வந்த 6 பேரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வெங்கடேசன் விபத்தில் இறந்துவிட்டார் என கூறி அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவி்ட்டனர்.

பணியில் அலட்சியம்

இதையடுத்து மற்ற 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனிடையே இது பற்றி அறிந்த வெங்கடேசனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் வெங்கடேசனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அழைத்து செல்லவில்லை. இதனால் தான் அவர் இறந்துவிட்டார். எனவே பணியில் அலட்சியமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத திருவெண்ணெய்நல்லூர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அங்குள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்ராசு, அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வெங்கடேசனின் உறவினர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்