நீர்வரத்து மேலும் குறைந்தது: தாமிரபரணி கரையோர பகுதிகளில் சீரமைப்பு பணி தீவிரம்

நீர்வரத்து மேலும் குறைந்ததால், தாமிரபரணி கரையோர பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-01-17 20:30 GMT
தாமிரபரணி ஆற்றில் உள்ள கோவில் மண்டபங்கள் வெளியே தெரிந்ததை படத்தில் காணலாம்
அணைகளில் நீர்திறப்பு குறைப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்ததால், பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால், உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 92 ஆயிரம் கன அடி வரையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் வெள் ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, ஆற்றங்கரைகளில் வசித்த மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மழை அளவு குறைந்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால், அணைகளில் இருந்து நீர் திறப்பும் குறைக்கப்பட்டது. தொடர்ந்து தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் தணிந்தது.

வெள்ளம் வடிந்தது
இதற்கிடையே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்தது. இதனால் நேற்று காலையில் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,325 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 4,330 கன அடியாகவும் இருந்தது.

இதேபோன்று மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,710 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 2,155 கன அடியாகவும் இருந்தது. கடனாநதி அணைக்கு வினாடிக்கு வந்த 512 கன அடி தண்ணீரும் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் மொத்தம் 6,997 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கோவில் மண்டபங்கள்
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மழை அளவு குறைந்து வருவதாலும், பல்வேறு இடங்களில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளமும் குறைந்ததாலும், தாமிரபரணியில் வெள்ளம் குறைந்து வருகிறது.

இதனால் நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது. மேலும் நெல்லை கைலாசபுரம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் உள்ள கோவில் மண்டபங்கள் வெளியே தெரிந்தன.

சீரமைப்பு பணிகள் தீவிரம்
நெல்லை வண்ணார்பேட்டை, மீனாட்சிபுரம், கைலாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்தது. தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம்-10, சேர்வலாறு-13, மணிமுத்தாறு-15, கொடுமுடியாறு-15, சேரன்மாதேவி-12, நாங்குநேரி-4, ராதாபுரம்-2, பாளையங்கோட்டை-5, நெல்லை- 2.20, கடனா- 5, ராமநதி-5, குண்டாறு-2, செங்கோட்டை- 3, சிவகிரி- 2.

மேலும் செய்திகள்