சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலாவின் தலைமையின் கீழ் அ.தி.மு.க. சென்றுவிடும்; கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி

சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் பரமக்குடி வருகை தந்தார். அப்போது அவர் பரமக்குடி ஓட்ட பாலம் பகுதியில் சுதந்திர போராட்டத்தின் போது மகாத்மா காந்தி வந்து பொதுமக்களிடம் நிதி திரட்டிய இடத்தில் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

Update: 2021-01-17 23:56 GMT
கார்த்தி சிதம்பரம் எம்.பி.
பின்பு அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவில் முதல் தடுப்பூசியை ஜனாதிபதிக்கும், இரண்டாவதாக பிரதமருக்கும் போட்டிருக்க வேண்டும். குருமூர்த்தி நடத்திய ஆண்டுவிழாவில் ஒரு அரசியல் கட்சி பிரமுகரை சாக்கடைத் தண்ணீர் என வரையறை செய்துள்ளார். அதன் பின் தற்போது நீதிபதிகளை விமர்சனம் செய்துள்ளார். அவரின் விமர்சனங்களை கண்டிக்கவேண்டும். அரசியல் ரீதியாக மத்திய அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்கிறார்களோ அவர்களை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித் துறை மூலம் அச்சுறுத்தி வருகிறது. இதில் நேரடியாக அனைத்து பாதிப்புகளையும் 
சந்தித்தவன் நான். மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பயப்படாது. தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக வந்து பார்வையிட்டு தமிழர்களின் கலாசாரத்தை பற்றி பேசியுள்ளார். மீண்டும் அவர் தமிழகம் வரவுள்ளார். தேர்தல் பிரசாரம் செய்யும் போது அடிக்கடி வந்து மக்களை சந்திக்க உள்ளார். எங்களுடைய கூட்டணி அமோக வெற்றி பெறும். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் மட்டும் தான் போட்டி. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் சசிகலா தலைமையின்கீழ் செல்லும். வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பெரிய அளவில் வரவேற்போ, வெற்றியோ கிடைக்காது. கமல்ஹாசன் அரசியலில் வெற்றி பெற வேண்டும் 
என நினைத்தால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் டாக்டர் செல்லத்துரை அப்துல்லா, பரமக்குடி நகர தலைவர் அப்துல் அஜீஸ், சோ.பா. ரெங்கநாதன், மாநில மீனவர் அணி தலைவர் ஆம்ஸ்ட்ராங், மாநில செயலாளர்கள் ஆனந்தகுமார், செந்தாமரை கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்