நிவாரணம் வழங்கக்கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் சாலை மறியல் சிதம்பரம் அருகே பரபரப்பு

சிதம்பரம் அருகே நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-01-18 00:19 GMT
அண்ணாமலைநகர், 

சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி, கீழநத்தம், வால்காரமேடு, கே.ஆடூர், சி.வீரசோழகன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகியது.

மழைநீரில் மூழ்கி அழுகிய பயிர்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிதம்பரம் மூத்த கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் அழுகிய பயிர்களுடன் நேற்று காலை சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இதுபற்றி அறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் இளங்கீரன், நிர்வாகிகள் திருவரசு, சம்பந்தமூர்த்தி உள்ளிட்ட விவசாயிகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் சாலையில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே அங்கு வந்த சிதம்பரம் சமூக நல தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்