மசினகுடி- மாயார் இடையே சாலையில் காட்டு யானை நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

மசினகுடி-மாயார் இடையே சாலையில் காட்டு யானை நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 4 மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர்.

Update: 2021-01-18 01:27 GMT
கூடலூர், 

கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் காயத்துடன் காட்டு யானை ஒன்று பல மாதங்களாக சுற்றி வருகிறது. மேலும் அடிக்கடி ஊருக்குள் வந்து முகாமிட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதனால் காயத்துடன் அவதிப்படும் காட்டு யானைக்கு உரிய சிகிச்சை அளித்து வனத்துக்குள் விரட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் பொக்காபுரம் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் முதுமலை கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் வனத்துக்குள் காட்டு யானை விரட்டப்பட்டது. தொடர்ந்து யானையின் உடல் நிலையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் காட்டு யானை சில சமயங்களில் ஊருக்குள் வருகிறது.

சாலையில் காட்டு யானை

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே காட்டு யானை வந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். தொடர்ந்து காட்டு யானை அங்கிருந்து 5 மணியளவில் மாயார் செல்லும் சாலையில் வந்து நின்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் யானை அங்கிருந்து செல்லாமல் சாலையில் அங்கும் இங்குமாக நடந்தவாறு இருந்தது. இதைத்தொடர்ந்து தர்பூசணி, வாழை உள்ளிட்ட பழங்களை வாங்கிவந்து மசினகுடி மாயார் சாலையில் பல இடங்களில் வைத்தனர். இதைக்கண்ட காட்டு யானை ஒவ்வொரு பழங்களை சாப்பிட்டு சுமார் 9 மணியளவில் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் போக்குவரத்து சீரானாது.

4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சாலையின் குறுக்கே காட்டு யானை நின்றதால் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக மசினகுடி- மாயார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சிங்காரா மின் உற்பத்தி நிலையத்திற்கு வேலைக்கு சென்ற ஊழியர்கள் உள்பட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காயத்துடன் சுற்றி வரும் காட்டு யானை ஊருக்குள் வந்து பழகிவிட்டது. மேலும் ஆர்வ மிகுதியால் சிலர் வழங்கும் உணவு பொருட்களை வாங்கி தின்று வருகிறது. இதனால் அடிக்கடி காட்டு யானை ஊருக்குள் வந்து இடையூறு செய்கிறது. எனவே வனத்தில் இருந்து வெளியே வராத வகையில் நிரந்தர நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்