கருங்கல் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு இரும்பு கதவை துளைத்துச் சென்றது

கருங்கல் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வெளியேறிய தோட்டா இரும்பு கதவை துளைத்துச் சென்றது.

Update: 2021-01-18 06:25 GMT
கருங்கல், 

குமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திகோடு குரண்டி பகுதியைச் ேசர்ந்தவர் ரவீந்திரன் (வயது 59). ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த 1997-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

பின்னர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர், துப்பாக்கி ஒன்றை வாங்கி வைத்திருந்தார். தற்போது, ரவீந்திரன் வங்கி காவலாளி பணியில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். இவருக்கு அந்த பகுதியில் 2 வீடுகள் உள்ளன.

துப்பாக்கி வெடித்தது

ரவீந்திரன் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு துப்பாக்கியை சுத்தம் செய்து ேதாட்டாக்களை லோடு செய்து வைப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு அவருக்கு சொந்தமான ஒரு வீட்டில் துப்பாக்கியில் தோட்டாக்களை வைத்தபடி துடைத்துக் கொண்டிருந்த தாக தெரிகிறது.

அப்போது தவறுதலாக கைவிரல் துப்பாக்கி விசையை அழுத்தியுள்ளார். இதனால் பயங்கர சத்தத்துடன் வெடித்து, அதிலிருந்து தோட்டா வெளியேறியது. தோட்டா பாய்ந்ததில் வீட்டு வாசல் முன்பு உள்ள இரும்பு கதவை துளைத்தபடி சென்றது. இதனால் அதில் ஒரு ஓட்டை விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. துப்பாக்கி வெடித்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்குப்பதிவு

இற்கிடையே அந்த பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கருங்கல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அமலதாஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர், அமலதாஸ் கொடுத்த புகாரின் பேரில் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கியை அஜாக்கிரதையாக கையாண்டதாக ரவீந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்