‘எம்.ஜி.ஆரின் வரலாறு தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி’ மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

எம்.ஜி.ஆரின் வரலாறு எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது என்று குரும்பப்பட்டி ஊராட்சியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

Update: 2021-01-19 03:46 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் குரும்பப்பட்டி ஊராட்சியில் தி.மு.க.சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது பெரும்பாலான பெண்கள், தங்களது பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதும் செய்யப்படவில்லை. கழிப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் இல்லை. படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வசதி, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் சுழல்நிதி நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிப்பு, நெசவாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேசினர். தொடர்ந்து அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

9,600 பேர் காத்திருப்பு

இங்குள்ள பெண்களின் கூட்டத்தை பார்க்கும்போது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை விரட்ட தயாராகிவிட்டனர் என்பதை காட்டுகிறது. இதற்கு நாங்க ரெடி? நீங்க ரெடியா?. இந்த கூட்டத்தில் பெரும்பாலான பெண்கள் பேசும்போது, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதாவது உள்ளாட்சித்துறை மூலமாக பல்வேறு பணிகள் நிறைவேற்றிட வேண்டும். ஆனால் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊழல் மணியாக திகழ்ந்து வருகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மிஞ்சும் அளவுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் உள்ளார். 10 ஆண்டுகளில் இந்த ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தவில்லை.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி அதன்மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்ற தந்துள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நான் ஒன்றை கேட்கிறேன். எடப்பாடி தொகுதியில் யாராவது ஒருவருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சொல்லமுடியுமா? எடப்பாடி தொகுதியில் மட்டும் படித்துவிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 9,600 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். தனது சொந்த தொகுதியிலே வேலைவாய்ப்பு பெற்று தரமுடியாத அவர், தமிழகம் முழுவதும் படித்த இளைஞர்களுக்கு எப்படி வேலை பெற்று தரமுடியும்.

துரோகம் என்பதற்கு உதாரணம்

தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்து இருந்தாலும் அது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கியாஸ் சிலிண்டர், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை அ.தி.மு.க. அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதுபோன்ற வி‌‌ஷயங்களை சுட்டிக்காட்டி பேசினால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. இதனால் அவர் பிரசாரம் செய்யும் இடங்களில் தரம் தாழ்ந்து தி.மு.க.வை விமர்சனம் செய்து வருகிறார். அவர் மக்களால் தேர்ந்தெடுத்து நேரடியாக முதல்-அமைச்சர் ஆகவில்லை. இந்த தொகுதி மக்கள் அவரை சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே தேர்வு செய்தீர்கள். அவர் எப்படி முதல்-அமைச்சர் ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்தது பற்றி பேசுகிறார். துரோகம் என்பதற்கு அவர் தான் உதாரணம்.

வருகிற 27-ந் தேதி சசிகலா வெளியே வருகிறார். அவர் வந்தவுடன் இவரது ஆட்டம் முடிந்துவிடும். சசிகலாவால் தான் இவர் முதல்-அமைச்சர் ஆனார். 1962-ம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சர் ஆனார். அதன்பிறகு ஓராண்டில் அவர் மரணம் அடைந்ததால் கருணாநிதியா? நாவலரா? என்று இருவரில் ஒருவர் முதல்-அமைச்சராக தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

எம்.ஜி.ஆரின் பரம ரசிகன்

அப்போது, கருணாநிதி, நாவலர் முதல்-அமைச்சர் ஆகட்டும் என்று தெரிவித்தார். ஆனால் பெரும்பாலானோர் கருணாநிதியை தேர்வு செய்தனர். அப்போது தி.மு.க. பொருளாளராக எம்.ஜி.ஆர். இருந்தார். நான் எம்.ஜி.ஆரின் பரம ரசிகன். சிறு வயதிலே பள்ளிக்கூடத்தை ‘கட்’ செய்துவிட்டு அவரது சினிமா பார்க்க செல்வேன். மந்திரகுமாரி திரைப்படம் மூலம் எம்.ஜி.ஆரை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் கருணாநிதி. இதுபோன்ற வரலாறு எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது.

ஜெயலலிதா ஆட்சி செய்கிறோம் என்று பேசும் இவர்கள், அவரின் மரணம் குறித்து இதுவரை எந்த உண்மையும் வெளியே வரவில்லை. ஜெயலலிதா இறப்பு குறித்து மர்மம் நீடிக்கிறது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்தார்.

தி.மு.க. ஆட்சி

தொடர்ந்து அவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமி‌‌ஷன் அமைத்தனர். ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஜெயலலிதாவின் மரணத்திற்கு விடை கிடைக்கவில்லை. இதை பற்றி முதல்-அமைச்சருக்கு எந்த அக்கறையும் இல்லை. அவரின் ஒரே நோக்கம் கொள்ளையடிப்பது தான். கொரோனா காலத்திலும் கூட கொள்ளையடித்த இந்த கும்பலை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டனர். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில், சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், நல்லதம்பி, பேரூர் செயலாளர் அர்த்தனாரீஸ்வரன், எடப்பாடி நகர செயலாளர் பாஷா, மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாச பெருமாள், குட்டப்பட்டி கமலக்கண்ணன் என்கிற ராஜா, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் ஏ.விஜயகுமார், பகுதி செயலாளர்கள் சாந்தமூர்த்தி, ரமேஷ்பாபு, எஸ்.பி.எம்.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்