நாகை மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 314 பள்ளிகள் இன்று திறப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

நாகை மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 314 பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால் பள்ளிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-01-19 04:54 GMT
நாகப்பட்டினம்,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு(2020) மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட வில்லை. இதனிடையே மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

கருத்து கேட்பு கூட்டம்

இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றுவது, முககவசம் அணிவது, கிருமிநாசினிகளை பயன்படுத்துவது என்பன உள்ளிட்டவைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.

314 பள்ளிகள் திறப்பு

இதை தொடர்ந்து நாகை வருவாய் மாவட்டத்தில் உள்ள 314 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இந்த பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திருமருகல் என மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பறைகளை சீரமைத்தல், விளையாட்டு மைதானம் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்ெகாள்ளப்பட்டன.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, கிருமிநாசினி வழங்குவது, சமூக இடைவெளி விட்டு அமர்வதற்கான அடையாளங்களை ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். 10 மாதங்களுக்கு பிறகு திறப்பதால் பள்ளிக்கு செல்ல ஆர்வமாக உள்ளதாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்