நிவாரணம் வழங்காததை கண்டித்து அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள்- பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

நிவாரணம் வழங்காததை கண்டித்து நாகை அருகே அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள்-பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-19 04:57 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் கனமழை பெய்தது.இதனால் நாகை, வடகுடி, கூத்தூர், பட்டமங்கலம், தேவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமாகியது.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து நேற்று வடகுடி பகுதியில் உள்ள வயலில் இறங்கி விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதி்ல் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் சரபோஜி, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தங்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய கணக்கெடுப்பு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கீழ்வேளூர்

கீழ்வேளூர் அருகே அத்திப்புலியூர்,நீலப்பாடி, ராதாநல்லூர்.குருமணாங்குடி செருநல்லூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் 600 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அத்திப்புலியூரில் விவசாயிகள் மற்றும் பெண்கள் அழுகிய நெற்பயிர்களுடன் வயல்களில் இறங்கி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் கீழ்வேளூர் அருகே கூத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களுடன் வயலில் இறங்கி நிவாரணம் வழங்கக்கோரி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். கூத்தூர், பட்டமங்கலம், தேவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்