தனியார் நிதிநிறுவனத்தினரின் மிரட்டல் காரணமாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தாயுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

தனியார் நிதி நிறுவனத்தினரின் மிரட்டல் காரணமாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தாயுடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-01-19 05:13 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டம் ஒக்கநாடு மேலையூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 45). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய தந்தை கணேசன் தொகுப்பு வீடு கட்டுவதற்காக தஞ்சை தெற்கு வீதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.6 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

இதற்கு வட்டியுடன் பணத்தை செலுத்தி வந்த நிலையில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு கணேசன் திடீரென இறந்து விட்டார். அதன்பிறகு நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தாததால் தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ.12 லட்சத்து 35 ஆயிரத்து 724 கட்ட சொல்லி நிதி நிறுவனம், பாஸ்கரன் குடும்பத்தினரை நிர்ப்பந்தம் செய்வதுடன் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

தீக்குளிக்க முயற்சி

வறுமையில் வாடும் தங்களால் கடனை திருப்பி செலுத்தும் அளவிற்கு வசதியோ, வருமானமோ இல்லை என கூறியும் அந்த தனியார் நிதி நிறுவனம் தொடர்ந்து நிரப்்பந்தம் செய்து வந்தது. இதனால் மனவேதனை அடைந்த பாஸ்கரன் நேற்று காலை தனது தாய் செல்லம்மாளை(61) அழைத்துக்கொண்டு தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுவுடன் வந்தார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனது தாயுடன் அங்கும், இங்குமாக சுற்றி வந்த பாஸ்கரன் திடீரென தான் வைத்திருந்த பையில் இருந்து பெட்ரோல் நிரப்பப்பட்ட கேனை எடுத்தார். பின்னர் அதில் இருந்த பெட்ரோலை தன் மீதும், தனது தாய் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

தரையில் புரண்டு அழுதனர்

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வேகமாக ஓடிச்சென்று பெட்ரோல் கேனை தட்டிவிட்டார். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் பிடித்தனர்.

அப்போது 2 பேரும் தரையில் புரண்டு கதறி அழுதனர். உடனே அவர்கள் 2 பேர் மீதும் தண்ணீரை ஊற்றிய போலீசார், அவர்களை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

வட்டிக்கு வட்டி, மீ்ட்டர் வட்டி

போலீசாரின் விசாரணையின்போது பாஸ்கரன் கூறியதாவது:-

அரசு வழங்கும் இலவச அரிசியை பெற்றுத்தான் நாங்கள் வாழ்க்கை நடத்தி வருகிறோம். எனது தயார் உடல்நலம் பாதிக்கப்பட்டு, வேலை எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளார். எனது தந்தை இறந்த ுவிட்டார். திடீரென தனியார் நிதிநிறுவன ஊழியர் வந்து எனது தந்தை ரூ.6 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும், இதுவரை ரூ.4 லட்சத்து 31 ஆயிரத்து 140 செலுத்தி விட்டதாகவும் தற்போது வட்டிக்கு வட்டி, மீ்டடர் வட்டி என ரூ.12 லட்சத்து 35 ஆயிரத்து 724 செலுத்த வேண்டும் என கூறினார்.

வீட்டை ஏலம் விடுவதாக...

உணவுக்கே போராடும் எங்களிடம் இவ்வளவு தொகையை கேட்கிறார்கள். எனது தந்தை கடன் பெறும்போது சில ஆவணங்கள் எழுதி பதிவு செய்து கொடுத்துள்ளார். எங்களிடம் நிரப்பப்படாத படிவங்களில் கையெழுத்து பெற்றனர். பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் கடன் கொடுக்கும்போது அந்த கடனுக்கு காப்பீட்டு தொகை செலுத்துவது சட்டப்படி நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால் அந்த காப்பீட்டுத் தொகையை செலுத்த ஏற்பாடு செய்யாத நிதி நிறுவனம், குண்டர்களை வைத்து மிரட்டுவதுடன், வீட்டை ஏலம் விடுவதாக அச்சுறுத்தி வருகின்றனர். மன உளைச்சலுக்கு ஆளான எங்களுக்கு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. நிதிநிறுவனத்தின் பிடியில் இருந்து எங்களை காக்க வேண்டும். எங்கள் வீட்டை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்