பழனி அருகே பலத்த மழை: தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றதால் பிணத்தை சுமந்து சென்ற கிராம மக்கள்

பழனி அருகே பலத்த மழை காரணமாக தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றதால் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி பிணத்தை சுடுகாட்டுக்கு சுமந்து சென்றனர்.

Update: 2021-01-19 05:46 GMT
நெய்க்காரப்பட்டி, 

பழனி அருகே உள்ள குதிரையாறு அணை பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கான சுடுகாடு குதிரையாற்றின் அருகில் பூஞ்சோலை கிராம பகுதியில் உள்ளது. பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் குதிரையாறு அணை நிரம்பியது. இதனால், அணையில் இருந்து உபரிநீர் குதிரையாற்றில் திறந்து விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் கடந்த 16-ந்தேதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. எனவே பூஞ்சோலை கிராமத்துக்கான பாதை துண்டிக்கப்பட்டது.

ஆபத்தான முறையில்...

இந்தநிலையில் அன்றையதினம் குதிரையாறு அணை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 53) என்பவர் இறந்துவிட்டார். ஆனால் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அவரின் உடலை அடக்கம் செய்ய பூஞ்சோலை கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் கிராமமக்கள் குதிரையாற்றில் ஆபத்தான முறையில் இறங்கி, சுப்பிரமணியின் உடலை சுமந்து சென்று பூஞ்சோலை கிராமத்தில் அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்