6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தச்சுத்தொழிலாளிக்கு 6 ஆண்டு சிறை திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

6 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தச்சுத்தொழிலாளிக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2021-01-19 20:45 GMT
சிவகுமார்

பாலியல் தொந்தரவு

திருவள்ளூர் மாவட்டம் பழைய கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). தச்சுத்தொழிலாளி. இவருக்கு மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சிவகுமார் தன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த 6 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

6 ஆண்டு சிறை

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பரணிதரன் தீர்ப்பு வழங்கினார். குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து சிவகுமாருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.6 ஆயிரத்து 500 அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீலாக சித்ரா வாதாடினார்.

மேலும் செய்திகள்