10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 242 பள்ளிகள் திறப்பு

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 242 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

Update: 2021-01-20 23:42 GMT
கள்ளக்குறிச்சி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்டதன் அடிப்படையிலும், கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 19-1-2021 அன்று முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்அடிப்படையில் நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 242 பள்ளிகள் நேற்று காலை திறக்கப்பட்டன.

கலெக்டர் ஆய்வு

இதையொட்டி காலையில் முக கவசம் அணிந்து பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் நுழைவு வாயில் முன்பு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.பின்னர் கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்த பிறகே வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு மாணவர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி வகுப்பறையில் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் வைட்டமின் மற்றும் சிங்க் மாத்திரைகள் வழங்கப்பட்டன. பெற்றோர் ஒப்புதல் கடிதத்துடன் வந்த மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடங்களை கற்பித்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல், தொட்டியம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், பள்ளி ஆசிரியர்களிடம், கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் நெறிமுறைப்படி மாணவர்களை அமரவைத்து பாடங்களை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, நேர்முக உதவியாளர் கோபி மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் கல்வி மாவட்ட அலுவலர் கார்த்திகா கொரோனா தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்