போலி ஆவணங்களுக்கு ரூ.51 லட்சம் கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை

போலி ஆவணங்களுக்கு ரூ.51 லட்சம் கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தணடனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2021-01-21 04:38 GMT
போலி ஆவணங்களுக்கு கடன்
திருப்பூரில் சிக்மா ரெடிமேடு தொழிற்சாலை உள்ளது. இதன் நிர்வாகி சம்பத்குமார். இவர் திருப்பூரில் உள்ள விஜயா வங்கியில் கடன் பெற போலி ஆவணங்களை கொடுத்தார்.

அப்போது வங்கி மேலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், மற்றொரு அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோர் அந்த ஆவணங்களை ஏற்றுக்கொண்டு ரூ.51 லட்சத்து 5 ஆயிரம் கடன் வழங்கி உள்ளனர்.

4 பேர் மீது வழக்கு
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தணிக்கை செய்தபோது போலி ஆவணங்க ளின் பேரில் கடன் வழங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணன், அதிகாரி உமாமகேஸ்வரி, ரெடிமேடு நிறுவன நிர்வாகி சம்பத்குமார், அதற்கு உடந்தையாக இருந்ததாக செய்யது பாரூக் ஆகிய 4 பேர் மீது கூட்டுசதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் கடந்த 2006-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

3 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி எஸ்.நாகராஜன், குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணன், உமாமகேஸ்வரி ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம், சம்பத்குமாருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், செய்யது பாரூக்கிற்கு ரூ.50 ஆயிரம் என்று மொத்தம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் அபராத தொகை செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்