எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் கீழே குதித்து தற்கொலை

சென்னை எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் தாண்டியும் பிணத்தை மீட்க போலீசார் வராததால் பயணிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.

Update: 2021-01-21 22:52 GMT
எழும்பூர் ரெயில்வே கட்டிடத்தின் மேல் இருந்து கீழே குதிக்கும் முதியவரையும், ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடப்ப
ரெயில்வே கட்டிடத்தில் ஏறிய முதியவர்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அமைந்திருக்கும் கட்டிடம் நேற்று வழக்கமான பரபரப்புடன் இயங்கியது. பயணிகள் நடமாட்டமும் வழக்கம்போலவே இருந்தது.

இந்தநிலையில் முதியவர் ஒருவர், அந்த கட்டிடத்தின் மாடி படிக்கட்டுகளில் வேகமாக ஏறிக்கொண்டிருந்தார். "எங்கே செல்கிறீர்கள்?", என சில பயணிகள் கேட்டும், அவர் அதை காதில் வாங்காமல் சென்று கொண்டிருந்தார்.

ஒருகட்டத்தில் கட்டிடத்தின் உச்சிக்கு சென்ற அவர், அங்கே அமர்ந்துகொண்டு தரையை வெறித்து பார்த்தபடி இருந்தார். ஏதோ விபரீதம் நடக்கப்போவதை அறிந்த பயணிகள் அவரை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர். சிலர் ரெயில்வே போலீசுக்கு தொடர்புகொண்டு விஷயத்தை தெரியப்படுத்தி கொண்டிருந்தனர். அதேவேளை அங்கு வந்த ரெயில்வே போலீசாரும் இதை கண்டும் காணாதது போல சென்றனர்.

கீழே குதித்து தற்கொலை
இதற்கிடையில் யாரும் எதிர்பாராதநிலையில் திடீரென அந்த முதியவர் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தார். தரையில் மோதிய வேகத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் மீண்டும் ரெயில்வே போலீசுக்கு தொடர்புகொண்டனர்.

சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் ஆகியும் போலீசார் அங்கே வரவில்லை. இதற்கிடையில் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வந்தனர். அவர்கள் அந்த முதியவர் இறந்துவிட்டதாகவும், உடலை கைப்பற்ற ரெயில்வே போலீசார் வருவார்கள் என்றும் கூறி சென்றுவிட்டனர்.

இதனால் ரத்தவெள்ளத்தில் அந்த முதியவரின் உடல் நீண்டநேரம் அங்கேயே கிடந்தது. இதனால் பயணிகள் ஆதங்கம் அடைந்தனர். சிலர் ஆவேசமாக எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீசாரிடம் நடந்ததை தெரிவித்தனர்.

பயணிகள் ஆதங்கம்
இதையடுத்து ரெயில்வே போலீசார், தற்கொலை செய்த முதியவரின் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெயில்வே கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து உயிரை விட்ட முதியவர் யார்? ஏன் இந்த முடிவை எடுத்தார்? என்பது குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எழும்பூர் ரெயில்வே போலீசாரின் தாமதமான நடவடிக்கையால் வேதனைக்குள்ளான பயணிகள் சிலர் கூறுகையில், "முதியவர் கட்டிடத்தில் ஏறும்போதே போலீசுக்கு தகவல் கொடுத்தோம். அப்போதே வந்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றியிருக்கலாம். அந்த முதியவர் உயிருக்கு போராடியபோதும் போலீஸ் வரவில்லை. போலீசாரின் இந்த அஜாக்கிரதை கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துக்கே எட்டி பார்க்காத போலீசாரை இனியும் நம்பக்கூடாது. நமது பாதுகாப்பை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்போல...", என்றனர்.

மேலும் செய்திகள்