தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த என்னை குறிவைத்து அவதூறாக பேசுகிறார்கள் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த என்னை குறிவைத்து அவதூறாக பேசுகிறார்கள் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார்.

Update: 2021-01-21 23:54 GMT
விழுப்புரம்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.க்கு அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பு சமூக நீதிக்கான கி.வீரமணி விருதை வழங்கி கவுரவித்துள்ளது. இதையொட்டி தொல்.திருமாவளவன் எம்.பி.க்கு விழுப்புரம் சமூகநீதி உணர்வாளர்கள் சார்பில் பாராட்டு விழா நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு திருவள்ளுவர் கல்வி இயக்க நிர்வாகி பாலு தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், மாவட்ட செயலாளர்கள் ஆற்றலரசு, பாமரன், சேரன், தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் பாதுகாப்பு கழக நிர்வாகி ரமேஷ், பேராசிரியர் பிரபாகல்விமணி ஆகியோர் வரவேற்றனர். துரை.ரவிக்குமார் எம்.பி. தொடக்க உரையாற்றினார். முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், தொல்.திருமாவளவன் எம்.பி.க்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

விழாவில் தமிழ் அறிஞர்கள், சமூகநீதி உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டு விருது பெற்ற தொல்.திருமாவளவன் எம்.பி.யை பாராட்டி பேசினார்கள். அதனை தொடர்ந்து அவர் ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்

எனக்கு சமூக நீதிக்கான விருது வழங்கியதை விட விடுதலை சிறுத்தைகள் கட்சியை அங்கீகரித்தது பெருமையாக உள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த வேண்டும், அதற்கு திருமாவளவனை குறி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்பட்டமான அவதூறுகளை அள்ளி இறைக்கிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்கும் எதிரான கட்சியல்ல, சமூகநீதியை, சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கம். அதனால் தான் இந்த இயக்கத்தை சமூக உணர்வாளர்கள் அங்கீகரித்துள்ளனர். இது 30 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம்.

முகத்திரையை கிழிக்கும்

சமூக நீதி என்ற கோட்பாட்டை இட ஒதுக்கீடு என்று சுருக்கிப் பார்க்க முடியாது. சமூகத்திலும், அரசியலிலும், பண்பாட்டிலும் ஒரு தாக்கத்தையும், மாற்றத்தையும் மற்றும் புதிய ஜனநாயக சமூகத்தை ஏற்படுத்தக்கூடியதுதான் சமூகநீதி. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படியாவது சமூகநீதியை அழிக்க வேண்டும் என்று சனாதன கட்சிகள் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சமூகநீதி, சமத்துவத்தை பேசுகிறது. எனவே அதை அழிக்க பார்ப்பார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டம் இருக்கும் வரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் போன்ற அமைப்புகளின் கனவு ஒருபோதும் நனவாகாது. அதனால்தான் பிரிவினைவாத அரசியலை தமிழகத்தில் புகுத்தப் பார்க்கிறார்கள், அவர்களின் முகத்திரையை விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழிக்கும்.

ஒருபோதும் தாமரை மலராது

பா.ஜ.க.வுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்களும் சமூகநீதிக்கு எதிரானவர்கள். 20 ஆண்டுகளாக தமிழகத்தில் தாமரை மலரும், மலரும் என்று சொல்லிக்கொள்கிறார்கள். தமிழக அரசியலில் ஒருபோதும் தாமரை மலராது. அவர்கள் முதலில் காவு வாங்கப்போவது அ.தி.மு.க.வை தான். அது எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தெரியுமோ தெரியாதோ என்று தெரியவில்லை. அ.தி.மு.க.வை காவு வாங்கிவிட்டு அந்த இடத்தில் பா.ஜ.க.வை கொண்டு வந்து தி.மு.க.வா, பா.ஜ.க.வா என்ற நிலையை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.

தமிழக அரசியலில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் சமூகநீதியையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் இளமாறன், மாநில துணை செயலாளர் ரமேஷ், விழுப்புரம் நகர செயலாளர் சரவணன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மாவோ, கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் தமிழ்குடி, விழுப்புரம் தொகுதி துணை செயலாளர் பெரியார், கள்ளக்குறிச்சி மாவட்ட துணை செயலாளர் அறிவுக்கரசு, மாவட்ட செய்தி தொடர்பாளர் கனக.அம்பேத், மயிலம் தொகுதி செயலாளர் செல்வச்சீமான், கீழ்எடையாளம் முகாம் செயலாளர் சுதாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் மருதம் அமைப்பின் நிர்வாகி ரவிகார்த்திகேயன் நன்றி கூறினார்.

முன்னதாக கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் இல்ல திருமண விழாவில் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் செய்திகள்